eps

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நாங்கள்தான் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ பழனிசாமி மிகவும் வாடிப்போய் உள்ளார். அவரை விட்டு விடுங்கள். தில்லியில் முகத்தை துடைத்தாகக் கூறியிருக்கிறார். எல்லாவற்றிலும் அவர் பொய்தான். 2011 டிசம்பர் 19 ஆம் தேதி நான் உள்பட எல்லாரையும் கட்சியை விட்டு நீக்கியது உலகமே அறிந்த விஷயம்தான். 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் இவர்களால் (எடப்பாடி பழனிசாமி ) அம்மா மறைவுக்குப் பின்னர் சின்னம்மா(சசிகலா)வை பொதுச் செயலர் ஆக்கினார்கள்.

அதன்பின்னர், அவர் பெங்களூரு சிறைக்குச் சென்றபின்னர் அனைவரும் சேர்ந்துதான் கட்சியில் இணைத்து என்னை துணைப் பொதுச் செயலராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு பயம் தொற்றியது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக அவரிடம் கூறவேயில்லை. ஏன்… அம்மா(முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) இருக்கும்போதே நான் மதுரை, தேனி பகுதியில் அரசியலில் இருந்தவன்.

சசிகலா சிறையில் இருந்தபோது வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து இப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தளவாய் சுந்தரம், ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் என்னுடன் வந்தனர்.

தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி-யில் கையெழுத்திடும் அதிகாரம் துணைப் பொதுச் செயலரான எனக்கு கிடையாது. இப்போது பன்னீர் செல்வம் வேற கட்சியில் இருந்து வெளியேறிவிட்டாரே.. இதனால் பிரச்சினை வருமே.. அதனால் நீயே தேர்தலில் போட்டியிடு என என்னுடைய சித்தி சசிகலா கூறினார்” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest