G09w5upXIAAYbDI

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நமீபியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

3-வது அதிவேக அரைசதம்; நமீபியா ஆறுதல் வெற்றி!

முதலில் விளையாடிய நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேன் ஃபிரைலிங்க் மற்றும் லோரன் ஸ்டீன்கம்ப் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய ஜேன் ஃபிரைலிங்க் 13 பந்துகளில் அரைசதம் விளாசி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 31 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, ரூபன் டிரம்பெல்மேன் 46 ரன்களும், அலெக்ஸாண்டர் 20 ரன்களும் எடுத்தனர். ஸேன் கிரீன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெலிங்டன் மஸகட்சா, பிளெஸ்ஸிங் முஸராபானி மற்றும் டினோடெண்டா மபோசா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், நமீபியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரியான் பர்ல் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நமீபியா தரப்பில் ஜேஜே ஸ்மித் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கெர்ஹார்டு எராஸ்மஸ் மற்றும் ரூபன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பெர்னார்டு மற்றும் பென் சிகோங்கோ தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், நமீபியா கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Namibia won the third and final T20I against Zimbabwe by 28 runs.

இதையும் படிக்க: எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்… இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest