
நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஜென் – ஸி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்ததும், கடந்த செப்.9 ஆம் தேதி அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன் நேபாளத்தின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, செப்.12 ஆம் தேதி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.
நேபாளத்தின் வன்முறையின்போது பக்தாப்பூர் மாவட்டத்தில் இருந்த முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதையடுத்து, நேபாள ராணுவத்தின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலமாக அவர் அங்கிருந்து தப்பி ஷிவாப்புரி வனப்பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டார்.
மேலும், சர்மா ஓலி உள்பட முன்னாள் பிரதமர்களும், மூத்த அரசியல் தலைவர்களும் ராணுவத்தின் பாதுகாப்பில் அவர்களது முகாமில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், சுமார் 9 நாள்கள் கழித்து முன்னாள் பிரதமர் சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி பக்தாப்பூரின் குண்டூ பகுதியில் உள்ள தனியார் வீட்டிற்கு குடியேறியுள்ளார். இத்துடன், அவர் அங்கு வசிப்பதால் அந்த வீட்டுக்கு மக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!