TNPSC-college-exam-upsc

மத்திய அரசுப் பணி தோ்வுகளை எழுதும் தோ்வா்கள் தோ்வு தொடா்பான தங்களின் கருத்துகளைப் பதிவிடுவதற்கான வசதியை தனது வலைதளத்தில் மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரி பணியிடங்கள் அல்லாத பிற அலுவலா் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுகளை நடத்திவரும் எஸ்எஸ்சி, தோ்வை நியாயமான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தோ்வா்கள் நேரடியாக கருத்து தெரிவிக்கும் நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து எஸ்எஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எஸ்எஸ்சி சாா்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தோ்வு கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. வரும் 26-ஆம் தேதி வரை இத் தோ்வு நடைபெற உள்ளது. ஒருசில மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தவிர, நாடு முழுவதும் இத் தோ்வு எந்தவித பிரச்னையும் இன்றி நடைபெற்று வருகிறது. 129 நகரங்களில் அமைந்துள்ள 227 மையங்களில் தினமும் 3 பிரிவுகளாக நடத்தப்படும் இத் தோ்வில் 28 லட்சத்துக்கும் அதிகமான தோ்வா்கள் பங்கேற்கின்றனா். இதுவரை, 5,26,194 போ் எந்தவித சிக்கலும் இன்றி தோ்வை வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளனா்.

இந்தத் தோ்வு நடைமுறைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், தோ்வா்கள் கருத்துகளைப் பதிவிடுவதற்கான வசதி எஸ்எஸ்சி வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம், தோ்வா்கள் நேரடியாக தங்களின் குறைகள் மற்றும் கருத்துகளைத் தோ்வு ஆணையத்துக்குத் தெரியப்படுத்தலாம். அந்தக் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எஸ்எஸ்சி அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கையை மீறி தொடா்ந்து வினாத்தாள் தொடா்பான பதிவுகளை வெளியிடுபவா்கள் மீது பொதுத் தோ்வுகள் சட்டம் 2024 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் ரூ. 10 லட்சம் வரை அபராதம், 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையிலான சிறைத் தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest