ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத்தின் பங்குகள் 1 முதல் 9.6 சதவிகிதம் வரை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.
வாரத்தின் கடைசி நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 82,749 ஆகவும், நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 25,358 ஆகவும் விற்பனையானது.
ஆனால், அதானி குழுமத்துக்கு சாதகமாக செபியின் அறிக்கையால், அந்த குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களின் பங்குகளில் அதிகபட்சமாக அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 9.6 சதவிகிதம் உயர்வுடனும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.4 சதவிகிதம் உயர்வுடனும் வர்த்தகமாகிறது.
குற்றச்சாட்டு என்ன?
பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் கூறியது. இது அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது தொடா்பாக விசாரணைக்கு ‘செபி’ உத்தரவிட்டது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட செபி, அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என அறிவித்தது.