நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ சங்கரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனும், தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜயபிரபாகரன்,
“ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைப்பவர், இப்போது தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்.
கேப்டன் போல நடித்து காமெடி லெஜண்ட்டாக உருவானவர் ரோபோ சங்கர். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அடிக்கடி அவரின் நினைவிடத்திற்கு வந்து அன்னதானம் கொடுப்பார். எங்களுடன் சில விஷயங்களைப் பேசி செல்வார்.
இன்றைக்கு அவர் நம்முடன் இல்லாதது கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ அவர்களுடைய குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம். தயவுசெய்து எல்லோரும் அவரவர் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று வருத்தமாகப் பேசியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சத்யராஜ், “தம்பி ரோபோ சங்கரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், கலையுலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘சிங்கப்பூர்’ சலூன் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தோம். வயது வித்தியாசம் பார்க்காமல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை தியேட்டரில் பார்த்து, கொண்டாடினோம். அவரின் இறப்பு வேதனையாக இருக்கிறது. 46 வயதுதான் ஆகிறது. அவருடைய குடும்பத்தார் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நினைவலைகளைப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…