
புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என செபி அறிவித்ததைத் தொடர்ந்து கௌதம் அதானி இவ்வாறு கூறியிருக்கிறார்.
பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அறிவித்ததைத் தொடர்ந்து, கௌதம் அதானி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கௌதம் அதானி வெளியிட்டிருந்த பதிவில், தீவிர, முழுமையான விசாரணைக்குப் பின், ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். தற்போது, அதனை செபி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதானி குழுமத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைதான் எப்போதும் வழிநடத்தி வருகிறது.
இந்த மோசடியான மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் நன்கு உணர்கிறோம். தவறான தகவல்களை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவின் மையங்கள், இந்திய மக்கள் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது.
வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்! என்று கௌதம் அதானி பதிவிட்டுள்ளார்.
செபியின் அறிவிப்பு
பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதாவது, வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றத்தை ஏற்படுத்தியது என்பதே முக்கிய குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது, பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த நிலையல்தான், இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக ‘செபி’ விசாரணைக்கும் உத்தரவிட்டது.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஹிண்டன்பா்க் நிறுவனம் மூடப்பட்டது. விசாரணையின் நிறைவாக, அது எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ‘செபி’ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“After a thorough investigation, SEBI has reaffirmed what we have always said that the Hindenburg allegations are baseless,” Adani Group Chairman Gautam Adani said.
இதையும் படிக்க…ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து