
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ‘மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சி மையம் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
ராணுவ பயிற்சி மையத்தின் அருகிலேயே முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெலிங்டன் ராணுவ மையத்தின் கமாண்டென்ட் பதவி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கமாண்டென்ட் பதவி வகித்து வந்த லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், லெஃப்டினல் ஜெனரல் மணீஷ்யெரி புதிய கமாண்டென்ட்டாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கமாண்டென்ட் லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தன்னுடைய பொறுப்பை மணீஷ்யெரியிடம் ராணுவ பாரம்பர்ய முறைப்படி ஒப்படைத்துள்ளார்.
புதிதாகப் பதவியேற்றிருக்கும் கமாண்டென்ட் மணீஷ்யெரி குறித்து தெரிவித்த ராணுவத்தினர், “டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவரான மணீஷ்யெரி, 1988 -ல் காஷ்மீர் ராணுவ, 9- வது காலாட்படைக்கு நியமிக்கப்பட்டார். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியிலும் முன்னாள் மாணவர்தான் இவர்.

37 ஆண்டுகளாக ராணுவ சேவையாற்றி வரும் இவர், கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல்ஹில் பனிமலை பகுதிகளில் பட்டாலியன் பிரிவுக்கு கட்டளை அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார். தற்போது வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டென்ட்டாக பதிவியேற்றிருக்கிறார்” என்றனர்.