
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மே 7 அன்று நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தியது.
இதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மைதான் என்று தாக்குதல் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி ஒரு விடியோவில், ‘மே 7 அன்று பஹவல்பூரில் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது’ என்று பேசியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவர்.
லஷ்கர்-இ- தொய்பாவும் ஒப்புக்கொண்டது
ஜெய்ஷ் அமைப்பைத் தொடர்ந்து லஷ்கர்-இ- தொய்பா அமைப்பும் ஆபரேஷன் சிந்தூரில் இழப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.
மே 7 அன்று இந்தியா நடத்திய தாக்குதலில் அழிந்த 9 பயங்கரவாத இடங்களில் லஷ்கரின் தலைமையிடமான முரிட்கே(muridke) முகாமும் ஒன்றாகும்.
இந்நிலையில் விடியோ ஒன்றில், மே 7 தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கே பயங்கரவாத முகாம், முன்பைவிட மிகப்பெரியதாக மீண்டும் கட்டப்பட்டு வருவதாக லஷ்கர் பயங்கரவாத தளபதி காசிம் கூறியுள்ளார்.
“இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபா கட்டட இடிபாடுகளில் நான் நிற்கிறேன். அதை மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடவுளின் அருளால இந்த மசூதி முன்பைவிட பெரியதாக கட்டப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த இடத்தில் பயங்கரவாதிகள் பலரும் பயிற்சி பெற்றதாகவும் காசிம் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், அழிக்கப்பட்ட இந்த கட்டடத்தை பயங்கரவாதக் குழு பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
After Jaish Now Lashkar Terrorist admits Pak Op Sindoor Claims
இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்