E0AEB5E0AEBFE0AE9CE0AEAFE0AF8D

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வதன் பகுதியாக நாளை (செப் 20 – சனிக்கிழமை) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கவுள்ளார்.

காலை 10 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், மாலை 3 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியிலும் உரையாற்றுகிறார் விஜய்.

விஜய்யின் பரப்புரைக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிபந்தனைகளை தொண்டர்கள் பின்பற்ற வேண்டுமென்று கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரை

இது குறித்து தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை… நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டு 12 விதிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

தவெக தொண்டர்களுக்கு 12 கட்டளைகள்

1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts). மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள். சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.

தவெக தொண்டர்கள்
தவெக தொண்டர்கள்

3.கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள். உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

4.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும். பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

5.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தவெக அறிக்கை
தவெக அறிக்கை
தவெக அறிக்கை
தவெக அறிக்கை
தவெக அறிக்கை
தவெக அறிக்கை

6.வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

7.தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

8. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

9.மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ. கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

10. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

12.தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest