AP25262774334363

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பணிபுரிவதற்காக செல்லும் ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

பலமடங்கு உயர்வு

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், வெளிநாட்டவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், எச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. ரூ. 1.32 லட்சமாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பேரிடி

கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களில் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனர்கள் வெறும் 11.7 சதவிகிதம் பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.

தற்போது எச்1பி விசா கட்டண அதிகரிப்பால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகப் போவது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்தான்.

வரும் காலங்களில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி பெருமளவிலான வெளிநாட்டுப் பணியாளர்களை ஐடி நிறுவனங்கள் பணியமர்த்துவது குறையும்.

வெள்ளை மாளிகை விளக்கம்

எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H1B visa fee hiked to Rs. 88 lakhs

இதையும் படிக்க : ‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ – டொனால்ட் டிரம்ப்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest