
புரட்டாசி மாதத்தினையொட்டி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 50 பக்தர்களை வைணவ ஆன்மிக தல சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகள், அம்மன் திருத்தலங்கள் மற்றும் புரட்டாசி மாதத்தை ஒட்டி வைணவ தல திருத்தங்களை கட்டணமின்றி பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் 50 பக்தர்கள் இலவசமாக காஞ்சிபுரத்தில் நான்கு திருத்தலங்களும், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு திருத்தலங்கள் என ஐந்து திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன் தொடக்க நிகழ்வு இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமராதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அடையாள அட்டை,குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களுடன் கூடிய பை வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார்.
சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர்கள் ராஜலக்ஷ்மி, செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.