மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் ‘பல்டி’.
வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு, செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.18) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் உன்னி சிவலிங்கம், ” இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. பாலக்காடு தான் என்னுடைய ஊர். இப்படத்தில் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் இருக்கும்.
ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.
‘கச்சி சேரா’ ஆல்பத்தை பார்த்து தான் சாய் அபயங்கரை தேர்வு செய்தேன். இன்று வரை எனக்கு பக்கபலமாக சாய் இருக்கிறார்.
ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். சாந்தனு அண்ணனிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம்.

ப்ரீத்தியிடம் ‘அயோத்தி’ படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார்.
இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார். எல்லோருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ப்ரீத்தி அஸ்ரானி, “ என்னுடைய முதல் படமான அயோத்தியில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம்.
தமிழ் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார்.
உன்னி சேட்டா இயக்குநர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார்.

இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோலத்தான், எனக்கு ‘பல்டி’ படமும் இருக்கிறது.
அதேபோல், ஜாலக்காரி பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…