mammootymohanlal

இந்திய சினிமா துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு இன்று (செப்டம்பர் 20) அறிவித்திருக்கிறது.

தாதாசாகேப் பால்கே:

இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா. 1913-ல் வெளியான மௌன படமான (silent movie) இப்படத்தை இயக்கியவர் தாதாசாகேப் பால்கே என்றறியப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (1870 – 1944). இவரே இந்திய சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

தாதாசாகேப் பால்கே
தாதாசாகேப் பால்கே

இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும், அவரையும் சிறப்பிக்கும் வகையில், அவரின் நூற்றாண்டு வருடமான 1969 முதல், இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றிய கலைஞர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் ஒருவருக்கு `தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என்று அறியப்படும் நடிகை தேவிகா ராணிக்கு 1969-ல் முதல்முறையாக இந்த விருது வழங்கப்பட்டது.

இரண்டாவது மலையாள திரைக் கலைஞன்!

இந்த விருதை இதுவரை தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். மேலும், தெலுங்கிலிருந்து 6 பேரும், மலையாளம் மற்றும் கன்னடத்திலிருந்து தலா ஒருவரும் இவ்விருதைப் பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், 2019-ல் ரஜினிகாந்த் இவ்விருதைப் பெற்ற 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு தென்னிந்திய நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோகன்லால் - மம்மூட்டி
மோகன்லால் – மம்மூட்டி

இதன் மூலம், மலையாள திரைத்துறையிலிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெறும் இரண்டாவது நபரானார் மோகன்லால்.

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிக் கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் அனைத்து சினிமா துறைகளிலிருந்து முன்னணி நடிகர் நடிகைகள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், மலையாள சினிமாவின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

சினிமாவை சுவாசிக்கும் கலைஞன்!

மம்மூட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சக நடிகர் என்பதைத் தாண்டி ஒரு சகோதரனாக ஒரு கலைஞனாகப் பல தசாப்தங்களாக அற்புதமான சினிமா பயணத்தைக் கொண்டவர்.

தாதாசாகேப் பால்கே விருது என்பது வெறுமனே ஒரு நடிகருக்கானது அல்ல. சினிமாவையே சுவாசித்து வாழும் உண்மையான கலைஞனுக்கானது.

உங்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் லால். உண்மையிலேயே இந்த கிரீடத்துக்கு தகுதியானவர்” என்று மோகன்லாலை வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழில் மோகன்லால் நடித்த `இருவர்’, `சிறைச்சாலை’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest