
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆலோசனையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 2 வாரச் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக சேலம் ஓமலூர் பகுதியில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுவிட்டு முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சேலத்தில் இருப்பதை அறிந்து பார்த்துவிட்டு வந்ததாகக் கூறினர். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் ஆர்வமாக இருப்பதாக உங்களைப் பார்த்து விட்டுச் செல்வதாக என்று வந்திருக்கிறேன்” என்றார்.
அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களைச் சந்திப்பேன் என்று ஏற்கனவே சொல்லியது குறித்த கேள்விக்கு, ‘நேரம் வரும்போது சொல்கிறேன். இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. இதுகுறித்து பின்னர் சொல்கிறேன். மேலும் அரசியலில் நிரந்தரமான நண்பரும், எதிரியும் இல்லை. அதே நேரத்தில் 7 மாதங்கள் உள்ள நிலையில், திமுகவைப் பொறுத்தவரையில் நான்காண்டுக் காலம் அரசியலில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுதிக் கொடுத்திருந்தோம். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது உங்கள் உங்களுடன் முதலமைச்சர், இதனால் அதிகாரிகள் தான் வேலைகளை விட்டுவிட்டு, வீடு வீடாகச் செல்கிறார்கள் தவிர, எந்த ஒரு மக்கள் நலனும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
நிச்சயம் தேர்தல் வரும்போது எப்படி இருந்தாலும் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் உருவாக்குபவர்கள் என்று தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் ராசிபுரத்தில் பேசும் கூட்டத்தில் கூட 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதேபோன்று மக்களுடைய எழுச்சி எங்கள் கூட்டணியின் பக்கம் இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைப்பது குறித்து அதிமுகவில் தான் கேட்க வேண்டும். அரசியலில் கருத்துக்களை ஆதரித்தும், எதிர்த்தும் பேசமுடியாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்குப் பிரசாரம் செய்வதாகப் பேசியிருந்தார்கள்.
தற்பொழுது அந்தக் கருத்திலிருந்து வெளியே வந்துள்ளார்கள். அது குறித்த கருத்துக்களை அவர்களிடமே கேட்க வேண்டும். தமிழகத்தில் தென்மாவட்டம், வடமாவட்டம் என்று பிரிக்கத் தேவையில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்பதை மட்டும்தான் சொல்ல முடியும்.
தற்பொழுது விஜய் தான் கட்சி ஆரம்பித்துள்ளார். கூட்டம் வருவதை வைத்து திமுகவும், எங்களுக்கும்தான் போட்டி என்று சொல்லக்கூடாது. தேர்தல் வரவேண்டும், வேட்பாளர்கள் ஒழுங்கானவர்களாகப் போடவேண்டும், பொறுப்பாளர்கள் போடவேண்டும் மேலும் மக்களும் ஓட்டுப் போட வேண்டும்.
அதன் பிறகுதான் சொல்ல முடியுமே தவிர, ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது. வாக்களிக்கும்போது வித்தியாசம் தெரியும். வாக்காளராக இருந்து வாகனத்தில் ஏறிச் செல்லும்போது, மக்களின் செய்கைகளைப் பார்த்தால் எது ஓட்டாக மாறும், மாறாது என்று தெரியும்.
பெரிய தலைவர்களெல்லாம் கட்சி ஆரம்பித்து, அக்கட்சிகள் எவ்வாறு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார்.
எல்லாம் விஷயங்களும் தெரியும், எத்தனை துறைகள் உள்ளன, எவ்வாறு வேலை செய்யவேண்டும், மத்திய அரசிடம் எவ்வாறு பணம் வாங்கவேண்டும், சாலை, மின்சாரம், உணவுக்காகவும் எவ்வளவு பணம் செலவாகும் என்பது குறித்து ஆட்சியிலிருந்தவர்களுக்குத்தான் தெரியும்.
எதுவும் இல்லாமல் திடீரென வந்து திமுகவிற்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் போட்டி என்று கூறுவது எப்படி பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.
பாஜக மிகப்பெரிய கட்சி. தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேச வேண்டாம். நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சி மாற்றத்திற்கு என்ன வழி என்று கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, பாஜகவையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் ஒன்று என்று பேசுவது தவறு என்றும் கூறினார்.