
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளம் ஓரமாக நடந்து சென்றபோது, திருச்சி-ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கரூர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பெண்ணின் உடலைக் காணச் சென்றுள்ளனர். அப்போது, லாலாபேட்டை அருகே உள்ள புனவாசிப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் (வயது 54) என்ற நபரும் வேடிக்கைப் பார்க்க வந்துள்ளார்.

காது கேட்காத, வாய்பேச முடியாத இவர் விபத்தில் இறந்த பெண்ணைப் பார்த்துவிட்டு , பின்னர் தண்டவாளத்தில் லாலாபேட்டை ரயில்வே நிலையத்தை நோக்கி வந்த போது திருச்சி- பாலக்காடு பயணிகள் விரைவு ரயில் மோதியதில், இவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதனையடுத்து, ரயில் விபத்துகளில் பலியான இருவரது உடலையும் கைப்பற்றிய கரூர் ரயில்வே போலீஸார், அவர்களின் உடல்களை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி பெண் பலியான சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே வேடிக்கை பார்க்க சென்ற நபரும் மற்றொரு ரயில் மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.