pawan-kalyan-og-event

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு’ எதிர்பார்த்த வெற்றியை தராததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் ‘ஒஜி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மீது பவன்கல்யாணின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

செப்டம்பர் 25 தசரா பண்டிகை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான முன்பதிவு தொடங்கி நடந்துவருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத் எல்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார்.

முழுக்க முழுக்க கருப்பு நிற உடையில், கையில் வாளுடன் அரங்குக்குள் நுழைந்த பவன் கல்யாண், கையில் இருந்த வாளை சுழற்றிக்கொண்டே மேடைக்கு வந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த பவுண்சர்களில் ஒருவர் மீது வாள் பட்டது. அந்தக் காட்சி மட்டும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

அந்த விழாவில் பேசிய பவன் கல்யாண், “இந்த விழா அரங்குக்குள் நுழைந்ததும் நான் துணை முதல்வர் என்பதையே மறந்துவிட்டேன்.

ஒரு துணை முதல்வர் வாளுடன் நடப்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?.

இந்த உடையில் மேடைக்கு வரவேண்டும் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனால்தான் இந்த உடையில் வந்தேன்.” எனப் பேசினார்.

இந்த விழாவில் பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், சுபலேகா சுதாகர், ஸ்ரியா ரெட்டி, சுதேவ் நாயர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் கலந்துகொண்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest