
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரை அடுத்த தோப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றது.

இதையடுத்து உயிருக்குப் பயந்து பைக்கைக் கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதற்கிடையில் அருகே இருந்த மரக்கடைக்குள் மணிகண்டன் புகுந்துள்ளார். ஆனாலும் விடாத அந்த மர்ம கும்பல் மரக்கடைக்குள் சென்று மணிகண்டனைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணிடம் மணிகண்டன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், காதலைக் கைவிட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரரர் மற்றும் அவருடன் சேர்ந்து 2 பேர் என மொத்தம் 3 பேர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.