
நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற கொழுப்பு அதிகமுள்ள பால் வகைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆவின் நிறுவனமும் இன்று பால் பொருள்களின் விலையைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிட்டது.
ஆவின் விளக்கம்
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்க அறிக்கைவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருள்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
மேலும், அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருள்களின் விலையை மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்து பால் உபபொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் பால் மற்றும் பால் உப பொருள்களை நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/- குறைத்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை பொதுமக்கள் ரூ. 1073/- கோடியை சேமித்துள்ளனர்.
2023 ஆம்ஆண்டு முதல்வர் ஸ்டாலின், பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை ரூ. 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மத்திய அரசால் ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருள்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தரத்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.
தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகிதகுறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10/- முதல் ரூ.50/- வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275/- ) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆவின் 200 கிராம் பன்னீர் ரூபாய் 110/- என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜிஎஸ்டி வரி குறைப்பின்படி, 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 3,600 இல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப்பட்ட நிலையில், இந்த வகை பொருளுக்கு ஆவின் அளித்து தள்ளுபடியை இன்றுமுதல் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, எதிர்க்கட்சியினர் உள்பட பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில், இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!