
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சேலத்தில் நேற்று(செப். 21) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
தற்போது நிலவும் கூட்டணி தொடர்பான விஷயங்கள், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், பிரிந்து சென்ற நிர்வாகிகளை சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
மேலும், பாஜக – அதிமுக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.
ஆனால், நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசியதாகவும், கூட்டணி தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள நயினார் நாகேந்திரன் தில்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்…