
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகிறது. சாலைகளில் செல்லும் பைக்குகளுக்கு இடையில் பாய்ந்தும், ஓடி விளையாடும் சிறுவர், சிறுமியர்களை துரத்தியும், பெண்கள் மற்றும் முதியவர்களை பார்த்து குரைத்தும் அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் தெருக்களில் செல்வோரை கடித்தும் விடுகிறது. நாய்கள் விரட்டுவதில் விபத்துகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாய் 13 பேரை கடித்தது. கடந்த 16-ம் தேதி ஜமீன் சிங்கம்ப்பட்டியில் வீடுகளில் மின் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியரை நாய் ஒன்று கடித்தது. கடந்த 20-ம் தேதி வி.கே.புரத்தில் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் அவரை கடித்தது மட்டுமின்றி சாலையில் நடந்து சென்ற 14 பேரை கடித்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வி.கே.புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் வி.கே.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு நாயின் உரிமையாளர் கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வளர்ப்பு நாய் வெறி பிடித்து உரிமையாளரையே கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்துவதோடு, அவற்றை வெளியே அழைத்து வரும் போது யாரையும் கடித்து விடாதபடி நாயின் வாய் பகுதியை கவசத்தால் மூடியிருக்க வேண்டும் போன்ற விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.