
மாநிலங்களவை பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியானதாக இணைய வழியில் மிரட்டல் விடுத்த மர்மநபரைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரில் வசிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்திக்கு மர்மநபர் ஒருவரிடமிருந்து கடந்த செப். 5-ஆம் தேதி கைப்பேசி வழியாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அந்த நபர் தான் மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்று தெரிவித்து, தொடர்ந்து சுதா மூர்த்தியிடம் பேசியுள்ளார்.
சுதா மூர்த்தியின் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், மேலும், சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரை பயப்படுத்த முயற்சித்துள்ளார்.
இதையடுத்து, தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து சுதா மூர்த்தி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.