
பரபரப்பான ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ரீதியிலான மோதல் வேகமெடுத்துள்ளது. ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.
இதனை இந்தியா ஏற்காத நிலையில், கடுமையான விரிகளை விதித்து இந்தியா மீது வர்த்தக ரீதியில் தாக்குதலை தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியாக அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டார். இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு பேரிடியாக விழுந்தது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஐ.நா. பொதுச் சபையின் 80-வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
“இந்தியா, அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஈடுபாட்டிற்கு பாராட்டுகள்” என மார்கோ ரூபியோ கூறியதாக வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.