
டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 2,200-க்கும் மேற்பட்ட சர்வதேச பாரா தடகள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை தந்திருக்கின்றனர்.
செப்டம்பர் 26 அன்று தொடங்கிய இந்த ஒன்பது நாள் உலகளாவிய போட்டிகளான இவைப் புதிதாகத் திறக்கப்பட்ட, அதிநவீன ‘மோண்டோ’ ஓடுதளத்தில் நடைபெறும் முதல் பெரிய போட்டிகளாகும்.
இதில் 104 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பதால், போட்டி அமைப்பாளர்கள் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மைதான வளாகத்திற்குள்ளேயே நுழைந்த இரண்டு தெரு நாய்கள், கென்ய நாட்டு அதிகாரி ஒருவரை மைதானத்திற்குள் வைத்தே கடித்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கூடியிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வின்போது, மைதான வளாகத்திற்குள்ளேயே இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் ஏற்கனவே தெரு நாய்க் கடிகளும், பல அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம், நகரின் தெருக்களில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வைக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தெருநாய்களை அடைக்க போதுமான காப்பகங்கள் இல்லாததால் ஆக்ரோஷமான நடத்தைக் கொண்ட அல்லது வெறி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாய்களை மட்டுமே பிடித்து, தனிமைப்படுத்தி, தடுப்பூசி போட வேண்டும் என்றும், மற்ற தெரு நாய்கள் தெருக்களிலேயே தொடர்ந்து இருக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பை மாற்றியமைத்தது.

தெருநாய்க்கடி: “போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?”- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
இந்தச் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்த உத்தரவு கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் வீரர்கள் தங்கியிருக்கும் இடங்களைச் சுற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அதைச்சுற்றி தெருநாய்கள் வராமல் இருப்பதைக் கண்காணித்துக் கொண்டிருப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளன.
இந்தச் சூழலில் கென்ய நாட்டு அதிகாரி ஒருவரை மைதானத்திற்குள் வைத்தே கடித்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதற்கான பாதுகாப்பை உறுதி செய்ய நகராட்சி, தீவிரமாக இறங்கியிருக்கிறது.