kanja-2

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கிய போதை வஸ்துவான கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸாரும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி, ஆந்திராவிலிருந்து நெல்லைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, நெல்லை – மதுரை நான்கு வழிச்சாலையில் பொட்டல் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லோடு மினி வேனை நிறுத்த முயன்றனர். இதில், லோடு மினி வேனின் பின்னால் வந்த கார் நிற்காமல் அதிவேகத்துடன் சென்றது.

தற்கொலை செய்த கலைஞர் பாண்டியன்
தற்கொலை செய்த கலைஞர் பாண்டியன்

தொடர்ந்து மினி வேனை மடக்கிப்பிடித்த போலீஸார், சோதனை நடத்தினர். அதில் 40 பார்சல்களில் 80 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டிரைவர் நித்திஷ்குமார் மற்றும் அவரின் நண்பர் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில், நெல்லை தச்சநல்லூரில் கேரள மாநிலப் பதிவெண் கொண்ட கார் சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த நிலையில், அக்காரின் கண்ணாடியை உடைத்து போலீஸார் சோதனையிட்டதில் 70 பார்சல்களில் 140 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அடுத்தடுத்த நடவடிக்கைகளி்ல் மொத்தம் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மினி வேன் டிரைவரான சுரேஷ்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரிடம் பேசினோம், “சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் பாண்டியன்தான் இதுபோன்ற கஞ்சா கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாழையுத்து, ராம்நகரில் வசித்து வந்த கலைஞர் பாண்டியன், ஆரம்பத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், கஞ்சா வியாபாரத்தில் இறங்கி நெல்லையிலிருந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்வதும், மீண்டும் நெல்லை திரும்பும்போது சாக்கு பைகளில் கஞ்சாவை நிரப்பி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கஞ்சா பார்சல்கள்
கஞ்சா பார்சல்கள்

கஞ்சா வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் அவர், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அவர் மீது அரிசி மற்றும் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், அவரது மகன் சுரேஷ்குமாரையும் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட வைத்துள்ளார்.

இந்தக் கஞ்சா கடத்தல் வழக்கில் தனது மகன் கைது செய்யப்பட்ட தகவலறிந்த கலைஞர் பாண்டியன், தன்னையும் போலீஸார் கைது செய்து விடுவார்கள் என நினைத்து பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest