annamalabjp

அதிருப்தி.. தனி ரூட்!

தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது.

ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது.

போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.

இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம்.

அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
அண்ணாமலை – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார்.

அண்ணாமலை, தினகரன்

முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம்.

பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, ‘வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், ‘வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்’ எனச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, “எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார்.

அன்புமணி, ராமதாஸ்

அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.’ என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், ‘நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்’ என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்.

அமித்ஷா
அமித்ஷா

இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம்” என்றனர் விரிவாக.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார்.

குபேந்திரன்

அதேநேரத்தில், ‘எடப்பாடி வேண்டாம் என்பதில்’ டி.டி.வி தினகரனும், ‘அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும்” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest