ராமநாதபுரம் களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (33). இவரது கணவர் பூவலிங்கம். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வளர்மதி, நேற்று கொத்தனார் வேலைக்கு சென்ற தனது கணவர் பூவலிங்கத்திற்கு மதிய உணவு கொடுப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். பாரதி நகரில் இருந்து ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வளர்மதியின் டூவீலர் சாலையில் குவிந்து கிடந்த மணலில் சிக்கி நிலை தடுமாறியது.

இதனால் சாலையில் சாய்ந்த டூவீலரில் இருந்து வளர்மதியியும் சாலையில் விழுந்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையில் விழுந்து கிடந்த வளர்மதியின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் வளர்மதி அந்த இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் பிரதான சாலையின் இரு புறங்களிலும் குவிந்து கிடக்கும் மணலை அப்புறபடுத்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல் பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்து நேராமல் இருக்க பேருந்தின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடுப்பு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடுப்பு பல பேருந்துகளில் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தலைக் கவசம் அணிந்திருந்த நிலையிலும் சாலையில் விழுந்த பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.