19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது.
எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சில சமயங்களில் கடந்த கால வெற்றிகளை வைத்து சில கோட்பாடுகளையும், தத்துவத்தையும் மாற்றாமல் அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.

மாற்றம் அவசியம்
அதனால் இந்த முறை மாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மேலும் கடந்த சீசனில் நாங்கள் செய்த தவறுகள் தான் இப்போது மாற்றத்தை முன்னெடுக்க எங்களுக்கு உதவியது” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” தரமான வீரர்களை பிற அணிகள் ஏலத்தில் எடுப்பதை பார்க்கும்போது சற்று பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால், ஏலத்தில் கட்டுப்பாடு முக்கியம்.
ஐஸ்க்ரீம் கடையில் நின்றுகொண்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் வேண்டும் என்று அடம் பிடிப்பது போல செயல்பட்டால், அளவுக்கு அதிகமாக பெருத்துவிடுவோம்” என்று பேசியிருக்கிறார்.
தவிர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு கொடுத்துவிட்டு சாம்சனை சிஎஸ்கேவுக்கு எடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், “எங்களுக்கு வாய்ப்பு இருந்ததால் பயன்படுத்திக்கொண்டோம்.
எங்களுடைய தொடக்க பேட்டிங்கில் சற்று பலவீனம் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதே சமயம் தோனி அணியில் இருந்து எப்படியும் ஒரு நாள் விலகுவார் என்பதை உணர்ந்துதான் இந்த மாற்றத்தை செய்தோம்.
சஞ்சு சாம்சன் தரமான சர்வதேச வீரர். இது அடுத்த தலைமுறைக்கான திட்டமிடல் தான்.
சென்னை அணி இரண்டு ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்பதை விட, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.