
கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,
“தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 9-ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தி.மு.க சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார்.
குறிப்பாக, கரூர் மாநகராட்சி சார்பில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துணை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் ,வெங்கமேடு மீன் விற்பனை அங்காடி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்கா உள்ளிட்ட கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதேபோல், ரூ 162 கோடி மதிப்பீட்டில் 18,339 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி புதிய திட்டப் பணிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
கரூர் வழியாக சேலம் கோயம்புத்தூர் வரும் அரசு பேருந்துகள் பழைய நகர பேருந்து நிலையம் வழியாகவும் புதிய பேருந்து நிலையம் வழியாகவும் இயக்கப்படும். திருச்சி தஞ்சாவூர், மதுரை செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும். நகர பேருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேரமும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து சேவை வழங்கப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக பொதுமக்கள் சிரமத்தை குறைத்து, அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையில் இயக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து, ராயனூர் சாலையில் திமுக சார்பில் 9-ம் தேதி நடைபெற உள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள 1562 வாக்குசாவடி முகவர்கள்,பி.எல்.ஏ-2 முகவர்கள், இளைஞரணி, மகளிரணியை சேர்ந்த 16,000 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புதிய பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட உள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கேட்கிறீர்கள். தமிழக அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை, கரூர் மாவட்டத்தில் 82,000 புதிய உறுப்பினர்கள் தி.மு.க-வில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்” என்றார்.