
‘சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!’
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘நான்கு முனைப் போட்டியெல்லாம் இல்லை. நாம் தமிழர் எப்போதும் தனிமுனைதான்.’ என வித்தியாசமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

‘நான்கு முனைப்போட்டி இல்லை!’
சீமான் பேசியதாவது, ‘விஜய் கட்சிக்கு விஜய்தானே முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியும். நான்கு முனைப் போட்டி என்பது கிடையாது. நாங்கள் தனிமுனைதான். மும்முனைப் போட்டி என அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அந்த கட்சிகள் யாராவது மொழியைப் பற்றி பேசுகிறார்களா?
என் நாடு, என் நிலம், என்னுடைய வளம் என இந்தக் கட்சிகள் பேசியிருக்கிறதா? அவர்கள் வாக்குகளை குறிவைக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் 1000 கி.மீ தூரம் இருக்கிறது. எங்களுக்கு இந்த நிலத்தில் போட்டியே கிடையாது. 2010 இல் கட்சியை தொடங்கும்போதே இந்திய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தேன்.

நான்கு பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் தோற்று இன்னமும் தனித்துப் போட்டி போடும் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. இந்திய அளவில், உலகளவில் இப்படி எந்தக் கட்சியுமே கிடையாது. விஜய்க்கும் எனக்கும் கொள்கையில் நிறைய தூரம் இருக்கிறது. நீங்கள் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள். தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்களா?’ என்றார் காட்டமாக.