
ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
இது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு தீவிர கவலைகளை அளிப்பதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் குறையவும், விநியோகச் சங்கிலிகள் சீர்குலையவும், நிச்சயமற்ற தன்மை ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.