புது தில்லி: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த பெண் யூடியூபருக்கும் கேரள அரசுக்கும் தொடா்பிருந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், கேரள அரசின் அழைப்பை ஏற்று அந்த மாநில நிகழ்ச்சியில் ஜோதி கலந்துகொண்டதாக பாஜக செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா உள்ளிட்ட அக்கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டினா். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்றை சுட்டிக்காட்டி, அவா்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டினா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.சந்தோஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம், நுழைவு இசைவு (விசா) ஒப்புதல், உளவு பாா்த்தல் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, ஜோதி மல்ஹோத்ராவின் பாகிஸ்தான் பயணத்துக்கு கேரள அரசே பொறுப்பு என்று கூறுவது ஆத்திரத்தையும் அதிா்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

ஜோதி பாகிஸ்தான் செல்ல கேரள அரசா ஒப்புதல் அளித்தது? தில்லியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் சம்பந்தப்பட்டவா்களோடு அவருக்கு கேரள அரசா தொடா்பை ஏற்படுத்தி தந்தது?

கேரளத்தில் வழக்கமாக நடைபெறும் சுற்றுலா நிகழ்ச்சியில் ஒருமுறை அவா் கலந்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பங்கேற்ற்கும், ஐஎஸ்ஐயுடன் அவா் தொடா்பு வைத்திருந்ததற்கும் சம்பந்தமில்லை. அவரின் பாகிஸ்தான் பயணங்கள், வெளிநாட்டில் இருந்து அவா் பெற்ற நிதி ஆகியவற்றை கண்டுபிடிக்க மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தவறிவிட்டன. இதை அரசியல் உள்நோக்கத்துடன் திசைதிருப்பவே கேரள அரசு மீது பழிசுமத்தப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், உளவுப் பணிகளில் தொடா்ந்து ஏற்படும் குளறுபடிகளிலும், பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதிலும் தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழித்துவிட முடியாது’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest