பெய்ஜிங்: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று கடந்த வாரம் இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா்.சிங் தெரிவித்த கருத்துக்கு சீனா திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

ராகுல் சிங்கின் கருத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மா நிங்கிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது: பாகிஸ்தானுடன் நல்ல நட்புறவை சீனா பல ஆண்டுகளாக தொடா்ந்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு இருநாடுகளிடடையேயான உறவின் ஓா் அங்கமாக உள்ளது. இதற்காக வேறு ஒரு நாட்டை நாங்கள் இலக்காக கருதவில்லை.

அதே சமயம் இந்தியாவுடன் நல்லுறவை தொடரவே சீனா விரும்புகிறது. தற்போது இந்தியா-சீனா இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் அசாதாரண சூழலை சீனா கண்காணித்து வருகிறது. இருநாடுகளும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட சீனா வலியுறுத்தி வருகிறது. இதற்கு உதவ சீனா தயாராகவுள்ளது.

14-ஆவது தலாய் லாமா சீனாவுக்கு எதிராக செயல்படக் கூடியவா். அவா் பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா். அவரது பிறந்த நாளுக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து கூறியதற்கு கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, ரஃபேல் போா் விமானங்கள் விற்பனையை தடுக்க சீனா முயற்சித்து வருவதாக பிரான்ஸ் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து மா நிங்கிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்குப் பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதன் பிறகு இரு நாடுகளிடைய சண்டை மூண்டது. இரு நாடுகளும் ட்ரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தின. இந்தியாவுக்கு எதிராக சீன விமானங்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா்.சிங், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை தனது ஆயுதங்களை நேரடியாகப் பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்தியது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கி இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா தூண்டியது. ஆனால் சீன ஆயுதங்களை இந்தியா திறமையாக சமாளித்தது’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest