Nitin-Gadkari

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

மேலும், நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்குத் தணிக்கை (சி.ஏ.) படிப்பு மாணவா்களின தேசிய மாநாட்டில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ், அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோா் நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கையை அறிமுகப்படுத்தினா். ஆனால், இது ஒரு சிலரை மட்டும் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் உள்ளோம்.

நாட்டின் ஏழைகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பது, நாட்டின் செல்வம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டும் குவியும் அபாயம் குறித்து மத்திய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார சூழல் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் கணக்குத் தணிக்கையாளா்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

கணக்குத் தணிக்கையாளா் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். வெறும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதும் மட்டும் கணக்குத் தணிக்கை அதிகாரிகளின் பணியல்ல. நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.

நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest