
ஆகாஷ் தீப்… இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் முளைத்த இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.
இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது.
அதுவும் புதிய கேப்டன் சுப்மன் கில். இளம் பட்டாளம், புதிய கேப்டன் இந்த அணி ஜெயிக்குமா என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்.
அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு முதல் டெஸ்டில் பேட்டிங்கில் 5 சதங்கள் அடித்து அசத்திய இந்த இளம் அணி, பவுலிங்கில் சொதப்பி தோல்வி கண்டது.

அடுத்த டெஸ்ட் போட்டி ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. பிளெயிங் லெவனில் பும்ரா இல்லை. வேறெந்த அணியாக இருந்தாலும் பும்ரா போன்ற நம்பர் ஒன் பவுலரை பென்ச்சில் அமரவைக்க யோசிக்கும்.
ஆனால், இங்கு அது நடந்தது. முதல் போட்டியில் பும்ரா இருந்தும் பவுலிங்கால் தோற்றோம், இரண்டாவது போட்டியில் பும்ரா இல்லையென்றால் அவ்வளவுதான் என பெரும்பாலானோர் புலம்ப ஆரம்பித்தனர்.
ஆனால், அவருக்குப் பதில் பிளெயிங் லெவனில் இடம்பிடித்த ஆகாஷ் தீப் என்ற வேகப்பந்துவீச்சாளர்தான், பெர்மிங்ஹாம் மைதானத்தில் சுமார் 50 ஆண்டுகளாகத் தொடரும் இந்திய அணியின் வெற்றியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முக்கிய காரணமாக அமைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
“இந்த வெற்றி உனக்காகத்தான் அக்கா” – ஆகாஷ் தீப்
336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்த கேப்டன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆனாலும், முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித் – ஹாரி ப்ரூக்கின் 300+ ரன் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது, இரண்டாவது இன்னிங்ஸில் ரூட் உட்பட டாப் ஆர்டர், மிடில் ஆர்டரை சாய்த்தது என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆகாஷ் தீப்பும் ஆட்ட நாயகன்தான்.
இந்தியாவுக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பரிசளித்த ஆகாஷ் தீப், “பந்தை கையில் எடுக்கும்போதெல்லாம் உன்னுடைய முகம்தான் எனக்கு நியாபகம் வரும்” என்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது சகோதரிக்கு இந்த வெற்றியை சமர்ப்பித்தார்.

2007 டி20 உலகக் கோப்பை : தோனி படையின் வெற்றி கொடுத்த இன்ஸபிரேஷன்!
1996-ல் பீகாரில் டெஹ்ரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ஆகாஷ் தீப், அம்மாநில கிரிக்கெட் கட்டுப்பாடுகளால் தனது கரியருக்காக மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தார்.
இவரின் அக்காவின் கூற்றுப்படி, 2007-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றியால் கிரிக்கெட்டு ஈர்க்கப்பட்டார் ஆகாஷ் தீப்.
உள்நாட்டு கிரிக்கெட் கரியரில் 2019-ல் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கினார்.
தேடிக் கண்டெடுத்த ஆர்.சி.பி!
அதே ஆண்டில், லிஸ்ட் ஏ கிரிக்கெட் விஜய் ஹசாரே தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப், அந்த ஆண்டின் இறுதியில் ரஞ்சி டிராபியிலும் அறிமுகமானார்.
அவர் அறிமுகமான முதல் ரஞ்சி சீசனிலேயே (2019 – 20) பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்பிறகு, 2022-23 சீசனிலும் பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இரு சீசன்களும் சேர்த்து 76 விக்கெட்டுகள் வீழ்த்தி பெங்கால் அணிக்கு முக்கிய பவுலராகத் திகழ்ந்தார்.

இவரின் திறமையைக் கண்டறிந்த பெங்களூரு அணி, 2021 ஐ.பி.எல்-லின் இரண்டாம் பாதியில் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டது.
2024 சீசன் வரை ரூ. 20 லட்சம் தொகைக்கு பெங்களூரு அணியில் விளையாடிக்கொண்டிருந்த ஆகாஷ் தீப், கடந்த ஐ.பி.எல் சீசனில் ரூ. 8 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
இதற்கிடையில் 2024-ல் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வந்த இங்கிலாந்துக்கெதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் ஆகாஷ் தீப்.
அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் மட்டும் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆகாஷ் தீப்புக்கு இந்திய அணியில் அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் காயம் காரணமாக 2 போட்டிகளோடு வெளியேறினார்.
இந்திய அணியின் புதிய நம்பிக்கை!
இந்த நிலையில்தான், இங்கிலாந்து தொடரில் விளையாட இவருக்கு அழைப்பு வந்தது.
முதல் போட்டியில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டாலும், இரண்டாவது போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
அந்த வாய்ப்பும் அவருக்கு சற்று அழுத்தமாகத்தான் இருந்தது. ஏனெனில், பும்ராவுக்குப் பதில் களமிறங்கினார்.
ஆனால், அந்த அழுத்தத்தையும் எனர்ஜியாக மாற்றி, பந்துவீச்சில் சீறினார் ஆகாஷ் தீப்.

இரண்டாவது டெஸ்டில் எடுத்த 10 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் போல்ட்.
ஆகாஷ் தீப்பின் இந்த வெற்றியானது, பும்ரா ஆடாத போட்டிகளில் யாரை இறக்குவது என்று கேள்விக்கு நம்பிக்கையான பதிலாக அமைந்திருக்கிறது.
அடுத்தடுத்து இவருக்கு தொடர்ச்சியாக அளிக்கப்படும் வாய்ப்புகள் அவரின் வெற்றிக்கு மட்டுமல்லாது நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளரையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவரின் கிரிக்கெட் கரியரின் பயணம் இப்படியென்றால், தனிப்பட்ட வாழ்க்கை அப்படியே நேரெதிரானது.
தன்னுடைய 16 வயதில் தந்தையை இழந்த ஆகாஷ் தீப், அடுத்த 6 மாதங்களில் தனது சகோதரனையும் இழந்தார்.
அதனால் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை.

அதிலிருந்து மீண்டுவந்த ஆகாஷ் தீப் கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட்டில் முன்னேறி வரும் நேரத்தில் அவரின் சகோதரிக்கு புற்றுநோய் பாதிப்பு.
இப்படியாக தான் சாதிக்கும் ஒவ்வொரு வெற்றியும் தனது சகோதரி மற்றும் தாயின் வெற்றி என்ற லட்சியத்தோடு, வேகம் மற்றும் ஸ்டம்பை குறிவைக்கும் துல்லியத்தோடு களமடிவரும் ஆகாஷ் தீப்புக்கு வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…