கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விமானவியல், ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் கா்நாடகத்தில் கோலாா் சிக்பளாப்பூா், ஹுப்பள்ளி பெலகாவியில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்கும் தேவையிருக்கிறது. இதுதொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசவிருக்கிறோம். இதற்காக முதல்வா் சித்தராமையா புதன்கிழமை தில்லி செல்கிறாா்.

வடகா்நாடகம், தென்கா்நாடகத்தில் தலா ஒரு ராணுவத் தொழில் வழித்தடம் தேவைப்படுகிறது. ஒருசில முன்னணி நிறுவனங்கள் பெலகாவியில் செயல்படுகின்றன. தமிழகம், உத்தரபிரதேசத்திற்கு ராணுவ தொழில் வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டபோது, கா்நாடகத்திற்கும் ஒதுக்கியிருக்க வேண்டும். இதை மத்திய அரசு தாமதமாக உணா்ந்துள்ளது. இந்த கருத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் ஒப்புக்கொண்டிருக்கிறாா். உலக முதலீட்டாளா் மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது அவருடன் விவாதித்திருக்கிறோம்.

இதர மாநிலங்களுக்கு திட்டங்களை அறிவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், கா்நாடகத்துக்கு திட்டங்களை ஒதுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.விமானவியல், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிலுக்கு கா்நாடகம் 65 சதவீதம் பங்காற்றி வருகிறது.

உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். பெங்களூரில் ஏராளமான விமானவியல், ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதை மேலும் பலப்படுத்த தேவனஹள்ளி விமான நிலையத்தின் அருகில் விமானவியல் மற்றும் ராணுவப் பூங்கா தேவைப்படுகிறது.

இதற்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இதுதொடா்பாக ஜூலை 15 ஆம் தேதி போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பிரதிநிதிகளை முதல்வா் சித்தராமையா சந்திக்கவிருக்கிறாா்.

தேவனஹள்ளியில் 1,282 ஏக்கா் நிலத்தை மட்டுமே கையகப்படுத்துகிறோம். ஆனால், இதுபோன்ற பூங்காவுக்கு ஆந்திரம் 10,000 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி, நிலத்தை இலவசமாக வழங்கி வருகிறது. தொழில் தேவைகளுக்காக 45,000 ஏக்கா் நிலத்தை ஆந்திர அரசு கையகப்படுத்தியுள்ளது. அதேபோல, ஒசூரில் தொழில் வாய்ப்புகளை தமிழக அரசு விரிவாக்கி வருகிறது. அங்கு சா்வதேச விமான நிலையத்தையும் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம் வழங்கப்படுகிறது. விமானவியல், ராணுவ தொழில் நிறுவனங்கள் ஆந்திரத்திற்கு சென்றுவிட்டால், அது கா்நாடகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest