
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார்.
கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒருங்கிணைத்த YouWeCan அறக்கட்டளையின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய கிர்க்கெட் விரர்கள் கலந்து கொண்டுள்ளனர். யுவராஜ் சிங், ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் மற்றும் டேரன் கோஃப் ஆகியோருடன் மேடையில் இணைந்த கோலி, தனது கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டதைப் பற்றிப் பேசினார்.
“நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் தாடிக்கு வண்ணம் பூசினேன். நான்கு நாட்களுக்கு ஒருமுறை வண்ணம் பூச வேண்டிய நேரம் வரும்போது உங்களுக்குத் தெரியும்” என ஓய்வுபெறுவதை தாடியுடன் தொடர்புபடுத்தி பேசினார் விராட்.
36 வயதான விராட் கோலி, இந்தியாவின் ஃபிட்டான வீரர்களில் ஒருவராகப் பர்க்கப்படுகிறார். இதனால் அவர் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் அதிர்ச்சியானதாக அமைந்தது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் யுவாராஜ் சிங் உடனான நட்பு குறித்து பேசினார் விராட். “நானும் யுவராஜ் சிங்கும் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல பிணைப்பைக் கொண்டிருந்தோம். நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, யுவி பா, பஜ்ஜு பா (ஹர்பஜன் சிங்) மற்றும் ஜாக் (ஜாஹிர்கான்) என்னைத் தங்கள் இறக்கைகளின் கீழ் பாதுகாத்தனர். டிரஸ்ஸிங் அறையில் என்னை சௌகரியமாக உணரச் செய்தனர்.” எனப் பேசினார் விராட்.,
யுவராஜ் சிங் உடல் நிலை பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்தது குறித்து, “அவர் (யுவராஜ்) கேன்சர் சிகிச்சைக்குப் பிறகு கம்பேக் கொடுத்தது வியக்க வைத்தது. அப்போது நான் கேப்டனாக இருந்தேன். கட்டக்கில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்தார். அப்போது யாரிடமோ, “இது நாம் சின்ன வயதில் கிரிக்கெட் பார்த்ததைப் போல இருக்கிறதே” எனக் கூறியிருந்தேன்.” எனப் பேசினார் விராட்.
“எனக்கு யுவராஜ் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. வேறு யாருக்காகவும் இதுபோன்ற ஒரு நிகழ்வுக்கு வரமாட்டேன்” என்றார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தப் பிறகு பொதுவெளியில் கோலி தோன்றவில்லை. தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.