
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தனது மகளை டென்னிஸ் வீராங்கனையாக்க, பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் தீபக் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளார். ஆனால், நாளடைவில், தந்தை – மகள் இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. மகள் நடத்திய வந்த டென்னிஸ் பயிற்சி மையம் மற்றும், மகளின் நடத்தை குறித்து தீபக்கின் நண்பர்கள் எழுப்பிய கேள்வியால், மகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், மகள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட அதிருப்தி போன்றவை, ராதிகா – தீபக் இடையே உறவை விரிசலடையச் செய்திருக்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பும் இருவருக்கு இடையே பிரச்னை வந்து, தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக தீபக் மிரட்டியிருக்கிறார். டென்னிஸ் அகாடமியை மூடுவதால் ஏற்படும் இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் தீபக் முன்வந்துள்ளார். ஆனால் அனைத்தையும் ராதிகா மறுத்துள்ளார். இதுவே கொலைக்கான காரணமாக மாறியிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25). இவர் தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராதிகா யாதவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
வீட்டில் முதல் மாடியில் ராதிகா யாதவ் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது தீபக் யாதவ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். நான்கு குண்டுகள் பாய்ந்ததில் ராதிகா பலியானார். தீபக் யாதவ் கைது செய்யப்பட்டார்.
காவல் துறை அதிகாரபூர்வ அறிக்கையில், ராதிகா நடத்திய டென்னிஸ் அகாதெமி தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.