
வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டையில் செயல்பட்டுவரும் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் தனது மேல் அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் அரசு அதிகாரிகளின் அராஜகம் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதற்கு இதுவும் ஒரு சான்று. தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களைத் தெளிவாகக் கடிதத்தில் பாரிஜாதம் குறிப்பிட்டுள்ள போதும், திமுக அரசு இதுவரை அந்த அதிகாரிகளைக் கைது செய்யாமல் இழுத்தடிப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களைத் தேடித்தேடி கைது செய்து, பொய் வழக்கு போடும் தமிழக அரசின் ஏவல்துறை, அத்தனை ஆதாரங்களும் மரண வாக்குமூலமும் தங்கள் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவது ஏன்?
தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறுகளை மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என்பதும், அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய மக்களாக இருந்தால் கண்ணும் காதும் வைத்தாற்போல கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை மூடி விடுவார்கள் என்பதும் ஊரறிந்த விஷயம்.
ஆனால் 30 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்த பாரிஜாதம் மரணத்தை அப்படி இலகுவாகக் கடந்துவிட முடியாது. எனவே, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.