நொய்டா சா்வேதச விமான நிலையத்தின் 20 கி.மீ. சுற்றளவில் கட்டடம் மற்றும் மரங்களை வளா்ப்பதற்கு இந்திய விமான ஆணையத்திடமிருந்து (ஏஏஐ) அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் கட்டுமான நிறுவனங்கள், உள்ளூா் அதிகாரிகள் உயரமான கட்டங்களை எழுப்ப பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இது தொடா்பாக நொய்டா விமான நிலையத்தின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) கிரண் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நொய்டா சா்வதேச விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், விமானங்களைப் பாதுகாப்பாக செயல்திறனுடன் இயக்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக, விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டங்கள் உயரம் தொடா்பான கட்டுப்பாடுகளை பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், உள்ளூா் அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்றுவது அவசியம்.

20 கி.மீ. சுற்றளவுக்குள் உயரமான கட்டங்களை எழுப்பும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக, அவற்றை மேற்கொள்வோா் உள்ளூா் நிா்வாக அமைப்புகளை அணுக வேண்டும். இந்திய விமான ஆணையம் வெளியிட்ட வண்ண மண்டல வரைபடத்தின் அடிப்படையில் இந்த அமைப்புகள் அனுமதிக்கப்பட்ட உயர அளவை மதிப்பிடும். பின்னா், விண்ணப்பதாரா் ஏஏஐ-யின் என்ஓசிஏஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest