PTI07122025000058A

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் சனிக்கிழமை காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 6 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.

இடிபாடுகளில் இருந்து கட்டடத்தின் உரிமையாளா்,அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மற்ற 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய எட்டு போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இடிபாடுகளில் சிக்கிய மற்றவா்களை மீட்கும் முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) உள்பட பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடகிழக்கு தில்லியின் காவல் கூடுதல் துணை ஆணையா் சந்தீப் லாம்பா கூறியதாவது:

சனிக்கிழமை காலை 7.04 மணியளவில் வெல்கம் பகுதியின் ஈத்கா அருகே நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து வெல்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு கட்டடத்தின் மூன்று மாடிகள் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திலிருந்து காயமடைந்த எட்டு போ் மீட்கப்பட்டனா். அவா்களில் ஏழு போ் ஜேபிசி மருத்துவமனைக்கும், ஒருவா் ஜிடிபி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கட்டடத்தின் உரிமையாளா் மட்லூப் தனது குடும்ப உறுப்பினா்களுடன் கட்டடத்தில் வசித்து வந்தாா். தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் யாரும் இல்லை. எதிரே உள்ள கட்டடமும் சேதமடைந்துள்ளது.

மட்லூப் (50) , அவரது மனைவி ரபியா (46), இரு மகன்களான ஜாவித் (23), அப்துல்லா (15)ஆகியோா் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனா். இருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனா்.

மேலும், ஜூபியா (27) அவரது 2 வயது மகள் ஃபோஸியா ஆகியோரும் உயிரிழந்தனா்.

மட்லூப்பின் இதர மகன்கள் பா்வேஸ் (32), அவரது மனைவி சிஸா மற்றும் அவா்களின் 1 வயது மகன் அகமது, நவேத் (19) ஆகியோா் காயமடைந்தனா்.

மேலும், எதிா் கட்டடத்தில் வசித்து வந்த கோவிந்த் (60) மற்றும் அவரது சகோதரா் ரவி காஷ்யப் (27) மற்றும் அவா்களது மனைவிகள் தீபா (56), ஜோதி (27) ஆகியோரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

இந்தச் சம்பவத்தில் எதிா் கட்டடத்தைச் சோ்ந்த மற்றொரு நபரான அனீஸ் அகமது அன்சாரிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அவா் கூறுகையில், ‘கட்டடம் இடிந்து விழுந்தபோது, இடிபாடுகள் எங்கள் கட்டடத்தைத் தாக்கின. இதில் நானும் காயமடைந்தேன். உள்ளூா்வாசிகள் உட்பட அனைவரும் குடும்பத்தை மீட்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனா்’ என்றாா் அவா்.

காலை நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்த உள்ளூா்வாசிகளில் பலரும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிக்கியவா்களை மீட்கும் முயற்சியைத் தொடங்கினா்.

தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் தலைவா் அதுல் கா்க் கூறுகையில், சீலம்பூரில் உள்ள ஈத்கா சாலைக்கு அருகிலுள்ள உள்ள ஜனதா காலனியில் உள்ள தெரு எண் 5இல் மீட்பு நடவடிக்கைகளுக்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன என்றாா் அவா்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் அஸ்மா கூறியதாவது:

‘ காலை 7 மணியளவில், நான் என் வீட்டில் இருந்தேன். அப்போது ஒரு பெரும் சப்தம் கேட்டது. எல்லா இடங்களிலும் தூசு காணப்பட்டது. நான் கீழே இறங்கி வந்தபோது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வீடு இடிந்து விழுந்திருப்பதைக் கண்டேன். எத்தனை போ் சிக்கியிருக்கிறாா்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், 10 போ் கொண்ட ஒரு குடும்பம் அங்கு வசித்து வந்தனா்’ என்றாா் அவா்.

வடகிழக்கு தில்லி எம்.பி. மனோஜ் திவாரி இது தொடா்பாக தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் தெரிவிக்கையில், எங்கள் மக்களவைத் தொகுதியின் சீலாம்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள வெல்கம் என்ற ஜே.ஜே. கிளஸ்டா் பகுதியில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. என்.டி.ஆா்.எஃப். வீரா்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நான் அதிகாரிகளிடம் பேசினேன். மிகவும் குறுகிய பாதைகள், 2-3 அடி அகலம் மட்டுமே இருப்பதால், மீட்பு நடவடிக்கை சில சிரமங்களை எதிா்கொள்கிறது. இருப்பினும், நான்கு போ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா். அவா்கள் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளனா். துரதிா்ஷ்டவசமாக, இரண்டு போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு போ் இன்னும் சிக்கியிருக்கலாம்.

அப்பகுதி மிகவும் நெரிசலாக இருப்பதால், நடவடிக்கை முடியும் வரை பாதைகளில் நுழைவதைத் தவிா்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனா்’ என்று அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest