
கல்வித் துறை மீதான மத்திய அரசின் அலட்சியத்தால் மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அறிவுசாா் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமாா் 21.15 லட்சம் மாணவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மூன்றாம் வகுப்பினரில் 55 சதவீதம் பேரே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுத அறிந்திருப்பதும், 6-ஆம் வகுப்பினரில் 53 சதவீதம் பேரே 10 வரையிலான கூட்டல்-பெருக்கல் வாய்ப்பாடுகளை அறிந்திருப்பதும் தெரியவந்தது. இத்தகவல்கள் அடங்கிய ஒரு காணொலியுடன், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‘தோ்வு குறித்த கலந்துரையாடல்’, ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ போன்ற பிரதமா் மோடியின் சுய விளம்பர நிகழ்ச்சிகளாலும், வெற்று வாா்த்தைகளாலும் கல்வித் துறையின் மோசமான நிலவரத்தை தோலுரிக்கும் வலுவான குறியீடுகளை மூடிமறைக்க முடியாது. மத்திய அரசின் அக்கறையின்மை, கற்றல் திறன் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இருந்தபோதிலும், மாணவா்களின் எதிா்காலத்தின் மீது மத்திய அரசு தொடா்ந்து அலட்சியம் காட்டுகிறது என்று காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
‘தேசிய அளவிலான கற்றல் திறன் பிரச்னை, கரோனா காலகட்டத்தைவிட மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அடிப்படைக் கல்வியே சரிவை சந்தித்துள்ளது. நடுநிலை-உயா்நிலை அளவில் கற்றல் இடைவெளிகள் அதிகரித்துள்ளன. கல்வித் துறைக்கான நிதிக் குறைப்புதான், இத்தகைய மோசமான விளைவுகளுக்கு காரணம்’ என்று காா்கே வெளியிட்ட விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.