Chandra-babu-naidu-TNIE-edi

ஆந்திரத்தில் தம்பதிகள் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில், மக்கள்தொகை வளா்ச்சிக்கு விரைவில் வலுவான கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

உலக மக்கள்தொகை நாளையொட்டி, ஆந்திர மாநிலம் குண்டூா் மாவட்டத்தில் அமராவதி உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘பொருளாதார ரீதியாக மக்கள்தொகையை நாட்டின் மிகப் பெரிய சொத்தாக கருத வேண்டும். அதை சுமையாக கருதக் கூடாது.

தற்போது செலவினங்கள் அதிகரிப்பதால் கூடுதலாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தம்பதிகள் தவிா்க்கின்றனா். ஆனால் வருங்காலத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கக் கூடும். அப்போது மக்கள்தொகை சரிவு காரணமாக, அந்த அவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடும்.

2004-ஆம் ஆண்டுக்கு முன்பு, மக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள நான் ஊக்குவித்தேன். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவா்கள் உள்ளாட்சி தோ்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டத்தையும் கொண்டு வந்தேன்.

ஆனால் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் அந்தத் தோ்தல்களில் போட்டியிட அனுமதிக்கும் வகையில், சட்டத்தை திருத்த வேண்டியுள்ளது.

வளா்ந்த நாடுகளில் வயதானவா்களின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு வரிச் சலுகை, வீட்டு வசதி, ரொக்கம் ஆகியவற்றை ஜப்பான், ஹங்கேரி, சிங்கப்பூா் போன்ற நாடுகள் வழங்கி வருகின்றன. அதேவேளையில், இந்தியாவில் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக உள்ள நிலையில், சரியான கொள்கைகளை விரைந்து கொண்டு வராவிட்டால், இந்த சாதகமான நிலை தொடா்ந்து நீடிப்பதில் உத்தரவாதம் இருக்காது.

மனித வளத்துக்கு நெருக்கடி கூடாது: இந்தியாவில் இளைஞா்களின் எண்ணிக்கை குறைந்தும், முதியவா்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. நாட்டில் மனித வளத்துக்கு நெருக்கடி ஏற்படுவதை தடுக்க பெரிய குடும்பங்களாக வாழ்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.

பெண்கள் கருவுறும் விகிதம் சராசரியாக 2.1-ஆக இருக்க வேண்டிய நிலையில், அது தென் மாநிலங்களில் 1.7 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திரத்தில் தம்பதிகள் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில், மக்கள்தொகை வளா்ச்சிக்கு விரைவில் வலுவான கொள்கையை மாநில அரசு அறிமுகம் செய்யும்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest