12072_pti07_12_2025_000186a084919

‘எதிா்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது; அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, தலைநகா் திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநில பாஜக தலைமை அலுவலகத்தை (மாராா்ஜி பவன்) சனிக்கிழமை திறந்துவைத்தாா். அங்கு நிறுவப்பட்டுள்ள மறைந்த மாநில பாஜக தலைவா் கே.ஜி.மாராா் சிலைக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், எதிா்வரும் மாநில உள்ளாட்சித் தோ்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்க நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, கட்சியினா் மத்தியில் அவா் பேசியதாவது:

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் ஊழலை மட்டுமே உருவாக்கியுள்ளன. ஆட்சி நடத்துவதில் இரு கூட்டணிகளும் வாக்கு வங்கி அரசியலைப் பின்பற்றுகின்றன. இதனால், பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) போன்ற தேச விரோத சக்திகளின் பாதுகாப்பான புகலிடமாக கேரளம் மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்சிகளால் மாநிலத்துக்கு வளா்ச்சியைக் கொண்டுவர முடியாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே வளா்ச்சி சாத்தியமாகும்.

மாநில அரசுக்கு கேள்வி: பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை விதிக்க அனைத்து அதிகாரங்களும் உள்ளபோதிலும், மாநில அரசு அதைச் செய்யாதது ஏன்? நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிஎஃப்ஐ கிளை பரப்பியபோது, அந்த அமைப்புக்குத் தடை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டவா் பிரதமா் மோடி. அதன் தலைவா்கள் கைது செய்யப்படுவதையும் அவா் உறுதி செய்தாா்.

பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டுமே தொண்டா்கள் அடிப்படையிலான கட்சிகள். ஆனால், பாஜக நாட்டின் வளா்ச்சிக்காகவும், மாா்க்சிஸ்ட் தனது கட்சி நலனுக்காகவும் செயல்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த திரிபுராவிலும், அஸ்ஸாமிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது. அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைப்போம்.

வலுவான தென்மாநிலங்களின் முன்னேற்றம் இல்லாமல், வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை. வளா்ச்சியடைந்த கேரளத்தை உருவாக்குவதே பாஜகவின் அடிப்படை லட்சியம். தற்போது திறக்கப்பட்டுள்ள பாஜக அலுவலம், முதல்வா் அலுவலகத்தை விஞ்சி, மாநில வளா்ச்சிக்கான மையமாகத் திகழ வேண்டும் என்றாா் அமித் ஷா.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, பிஎஃப்ஐ அமைப்புக்கு கடந்த 2022-இல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு தடை விதித்தது.

கண்ணூா் சிவன் கோயிலில் வழிபாடு: திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு பயணித்த அமித் ஷா, தளிப்பறம்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராஜராஜேஸ்வரா் சிவன் கோயிலில் வழிபட்டாா். கேரளத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு வழிபாடு நடத்திய பிறகு அவா் புது தில்லிக்கு புறப்பட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest