
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை விருந்துவைத்துக் கொண்டாடுவது மட்டுமல்ல, பாலில் குளித்தும் கொண்டாடலாம் என்று அஸ்ஸாமில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.
அஸ்ஸாமின் நல்பாரியில் உள்ள பரலியாபர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரின் மனைவி திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணிக் அலியின் மனைவி இரண்டு முறை வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்பு மனைவியைச் சமாதானம் பேசி வீட்டுக்கு அழைத்துவந்து, பெண் குழந்தைக்காக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும், அவரது மனைவி நடத்தையில் மாற்றம் ஏற்படாமல் இருந்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன மாணிக் அலி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். விவாகரத்துக்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்ததால், கடைசியாக இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து தனது மனைவியின் விவாகரத்தை மாணிக் அலி வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். அதாவது சுமார் 40 லிட்டர் பாலை அவர் மேல் ஊற்றிக் குளித்துள்ளார்.
இத்தனை நாள்களாக தனக்கு மன உளைச்சலாக இருந்த மனைவி இன்றுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் தாம் இவ்வாறு கொண்டாடுவதாக மாணிக் அலி விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த விடியோவில், எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து ஆனது மகிழ்ச்சி, ஆனால் என் மகளை மனைவி அழைத்துச் சென்றுவிட்டார். அது எனக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் கேமராவை ஆன்செய்து பாலில் குளித்ததாகவும், மறுபிறவி எடுத்ததுபோல் உணர்வதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கடந்தாண்டு ஆடம்பரமான விவாகரத்து விருந்தை நடத்தினார். மஞ்ஜித் என்பவர் 2020இல் கோமலை மணந்தார். அவர்களின் திருமணம் 2024 இல் விவாகரத்தில் முடிந்தது, இந்த நிகழ்வை மஞ்ஜித் பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்.
விருந்தில் மஞ்சீத் கோமலின் திருமண புகைப்படத்தில் திருமணம் மற்றும் விவாகரத்தின் தேதிகளுடன் ஒட்டப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.