
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவருடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
சாய்னா நேவாலுக்கும், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபள்ளி காஷ்யபுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார் சாய்னா நேவால்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாய்னா நேவால், “வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளுக்கு சில சமயங்களில் அழைத்துச் செல்கிறது.
பல யோசனைகளுக்குப் பிறகு நானும் பருபள்ளி காஷ்யபும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக முடிவெடுத்திருக்கிறோம். பரஸ்பரம் எங்கள் இருவருக்காகவும் நாங்கள் அமைதியையும், வளர்ச்சியையும் தேர்வு செய்கிறோம்.
நினைவுகளுக்கு நன்றியுடன் இருக்கிறேன். மேலும், இனி வரும் காலத்தில் எல்லாம் நலமாக அமைய வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எங்கள் ப்ரைவசியைப் புரிந்து மதித்ததற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

சாய்னா நேவாலும், பருபள்ளி காஷ்யபும் ஹைதராபாத்தில், பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி எடுத்தவர்கள்.
சாய்னா நேவால் இந்தியாவில் இரண்டாவது பேட்மிண்டன் வீராங்கனையாக ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.
அதுபோல, பருபள்ளி காஷ்யப்பும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.