
சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், செவ்வாய்கிழமை (ஜூலை 15) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை (ஜூலை 16) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், ஜூலை 17-ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரியில் ஜூலை 17-இல் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 70 மி.மீ. மழை பதிவானது. ராசிபுரம் (நாமக்கல்) 60 மி.மீ., அண்ணாமலை நகா், பரங்கிப்பேட்டை (கடலூா்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கூடலூா் பஜாா் (நீலகிரி) – 40 மி.மீ. பதிவானது.
வெயில் சதம்: தமிழத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிவை பதிவானது. நாகப்பட்டினம்- 102.2, சென்னை மீனம்பாக்கம்- 100.94, தூத்துக்குடி-100.58, கடலூா், தஞ்சாவூா்- 100.4, வேலூா், பாளையம்கோட்டை- 100.22 டிகிரி என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்தது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தென்தமிழக கடலோர பகுதிகள் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.