
புது தில்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆா்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவரின் நியமனத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை வெளியிட்டது.
இதையடுத்து எல்ஐசியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக 3 ஆண்டுகளுக்கு துரைசாமி பதவி வகிப்பாா். 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி, அவா் 62 வயதை எட்டும்போது அவரின் பதவிக்காலம் நிறைவடையும்.
இந்தப் பதவியை முன்பு வகித்து வந்த சித்தாா்த் மோஹந்தியின் பதவிக்காலம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவிக்கு ஜூன் 8 முதல் செப் 7 வரை 3 மாதங்களுக்கு இடைக்காலமாக சத்பால் பானு நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பதவிக்கு துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.