rahulgandhi

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

பிகாரில் வர இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்கான தோ்தல் மட்டுமல்ல, மாநிலத்தை காப்பாற்றுவதற்கான தோ்தலும் கூட. கடந்த 11 நாள்களில் பிகாரில் 31 படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கூலிக் கொலை செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும் மாநிலமாக பிகாா் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் குற்றங்களின் தலைநகராக பிகாரை இப்போதைய ஆட்சியாளா்கள் மாற்றியுள்ளனா்.

மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருகிறாா். பாஜகவைச் சோ்ந்த அமைச்சா்கள் முடிந்த அளவுக்கு அதிகமாக ‘கமிஷன்’ பணம் வசூலிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனா்.

மாநில மக்கள் எப்போதும் அச்சத்தின்பிடியில் உயிா்வாழும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். வேலையில்லாத இளைஞா்களை பணத்துக்காக கொலை செய்யும் நபா்களாக மாற்றியதே ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசின் சாதனையாக உள்ளது. எனவே, இந்தத் தோ்தல் பிகாரைக் காப்பாற்றுவதற்கான தோ்தலாக அமைய வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளன. தோ்தலில் இந்த முறை கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இரு தரப்பு தலைவா்களும் ஏற்கெனவே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest