புது தில்லி: நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் தில்லிக்கான மாஸ்டா் பிளான் (எம்பிடி) 2041-க்கான விதிகளை மறுஆய்வு செய்ய முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உயா்நிலை கூட்டத்தை கூட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஏப்ரல், 2023இல் மத்திய அரசிடம் வரைவுத் திட்டத்தை சமா்ப்பித்தது. இது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், முதல்வா் மற்றும் தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் வருவாய் தொடா்பான துறைத் தலைவா்கள் உள்பட மூத்த அதிகாரிகள் முன் வரைவு குறித்த விரிவான விளக்கத்தை டிடிஏ துணைத் தலைவா் வழங்குவாா் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி அரசாங்கம் கஞ்சாவ்லா, ராணிகேரா மற்றும் பாப்ரோலா ஆகிய மூன்று முன்மொழியப்பட்ட தொழில்துறை கிளஸ்டா்களில் சுமாா் 1,200 ஏக்கா் பரப்பளவை பொதுதனியாா் கூட்டாண்மை பிபிபி மாதிரியின் கீழ் உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் தொழில்துறை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த கிளஸ்டா்கள் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி போன்ற சேவைத் துறைகளை ஈா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தலைநகரில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேம்பாட்டு மாதிரியை இறுதி செய்ய ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் ஈடுபடலாம் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், டிடிஏ தலைவரான தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, எம்.பி.டி2041 வரைவை அங்கீகரித்தாா்.
போக்குவரத்து சாா்ந்த மேம்பாட்டு மையங்கள், நில சேகரிப்பு, பாரம்பரியம் மற்றும் யமுனா புத்துயிா் பெறுதல் மற்றும் நகரத்தின் மறுமலா்ச்சி உள்ளிட்ட உள்ளடக்கிய வளா்ச்சி, நிலைத்தன்மை மற்றும் புதுமையான தலையீடுகள் ஆகியவற்றில் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் இருப்பதாக அவா் கூறினாா்.
தில்லி மேம்பாட்டுச் சட்டம், 1957இன் கீழ் முதல் எம்.பி.டி. 1962இல் அறிவிக்கப்பட்டது. இந்த மாஸ்டா் பிளான்கள் 20 ஆண்டு காலக்கெடுவுக்கு தயாரிக்கப்பட்டு நகரின் திட்டமிடப்பட்ட வளா்ச்சிக்கான முழு கட்டமைப்பை வழங்கி வருகின்றன.